நீலகிரி: உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ரிவால்டோ, கடந்த மே மாதம் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. அந்த யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வன பகுதியிலேயே சுதந்திரமாக விடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று ரிவால்டோ யானையை 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட சிக்கள்ளா வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர்.
குதூகலத்தில் ரிவால்டோ
ஆனால் அந்த யானை 24 மணி நேரத்தில் மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கே திரும்பி வந்தது. இதனையடுத்து அந்த யானையை வனத்துறையினர் ரேடியோ காலர் கருவி மூலம் கண்காணித்து கிராமப் பகுதிக்கு வராமல் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், காட்டு யானை ரிவால்டோ தன்னுடன் நெருக்கமாகப் பழகும் நான்கு காட்டு யானைகளுடன் அடிக்கடி கொஞ்சி விளையாடி வருகிறது. அதில் ஒரு காட்டு யானையுடன் ரிவால்டோ கொஞ்சி விளையாடும் காட்சியை வனத்துறையினர் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரிவால்டோ யானையால் வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா? - சென்னை உயர் நீதிமன்றம்