நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் உள்ளிட்ட நான்கு நகராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பது, குடிநீர் வழங்குவது, தெரு விளக்கு அமைப்பது, கழிவு நீர் தூய்மை, கால்வாய் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி நகராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஊட்டி நகராட்சியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் கரோனா தொற்று காலகட்டத்தில் நேரம் பார்க்காமல் உழைத்தவர்கள்.
நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என தொடர்ந்து பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியம் மாத இறுதியில் வழங்கப்படுவதாகவும் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் ஊழியர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாதம் ஊதியம் 21ஆம் தேதியாகியும் தற்போதுவரை வழங்கவில்லை எனவும், பண்டிகை காலங்கள் நெருங்குவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஊழியர்கள் இன்று (அக்.21) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகராட்சியின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.