நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இயற்கை அழகு, பசுமையான காடுகள், நீலவண்ணங்களில் காட்சியளிக்கும் அடுக்கடுக்கான அணைகள் ஆகியவை உள்ளன. இங்கு 2865 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் ஏராளமான உயிரினங்களும், தாவர வகைகளும் உள்ளன.
இந்த வனப்பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த 2002ஆம் ஆண்டு பிளாஸ்டிக்கை தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தடை அமலில் இருந்தாலும், பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை சாலை ஓரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசுகின்றனர். இதனால் வனவிலங்குகள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில், காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காமராஜ் சாகர் அணை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், அணையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட பல டன் பிளாஸ்டிக் கழிவுகளும் அணையில் தேங்கியுள்ளன.

அணையில் தேங்கி கிடக்கும் பல டன் பிளாஸ்ட்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் மிகவும் மோசமாக காட்சி அளிப்பதுடன். துர்நாற்றமும் வீசுகிறது.
இதனால் அந்த அணையை ஒட்டி உள்ள ஆதிவாசி மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதால் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை தற்போது அமல்படுத்த நீலகிரி மாவட்டம் ஒரு முன் மாதிரியாக இருந்தாலும், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது என பொதுமக்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.