சர்வதேச மலைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் மலைகள், இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மலைகளின் அரசி என்று அழைக்கபடும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் யுனஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்தை பெற்றுள்ளது. நீலகிரியில் உள்ள மலைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு மூன்றாயிரம் சோலை மரங்கள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கிவைத்தார்.
பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலையை பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருவதாக அப்போது அவர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண் மண்டலமாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், இயற்கை வேளாண் செயலியை தொடங்கிவைத்து இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விரைவில் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டுமென வேண்டுகோள்விடுத்தார்.