நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்து போக்குவரத்து மற்றும் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. குன்னூர், மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் தண்டவாளங்களில் அடல்லி, ரன்னிமேடு, ஹில்கிரோ போன்ற இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்து சேதமடைந்தன.
அவ்வாறு சேதமடைந்த தண்டவாளங்களை சீர் செய்யும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், மீண்டும் ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் சேதம் அடைந்தன. தொடர்ந்து 3 நாட்கள் மேட்டுப்பாளையம், குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மலை ரயில் சேவை காலை 7.10 மணியளவில் துவங்கப்பட்டது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான கால சூழல் நிலவி வரும் நிலையில், 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். மேலும் ரயில் பயணத்தின்போது, இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்ததுடன், மலை முகடுகள், நீர்வீழ்ச்சிகள், வளைந்து செல்லும் ரயில் பாதை மற்றும் குகைகள் உள்ளிட்டவைகளைக் கண்டு ரசித்ததாகவும், இது போன்ற ரயில் பயணம் மேற்கொள்வது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குன்னூரில் யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறை அலுவலருக்கு படுகாயம்!