கோடை விடுமுறை ஆரம்பித்தாலே போதும், சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க வருகை தருகின்றனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்களை காணவும் சுமார் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும்கூட வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம், தனியார் மூலம் பல்வேறு கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்தாண்டு மலர் மற்றும் பழ கண்காட்சி மட்டுமே நடத்தப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்காக நாய் கண்காட்சி, பழங்கால கார் கண்காட்சி, வண்ண மீன்கள் கண்காட்சி போன்றவை நடத்தப்படுகின்றன.
இதில் முதற்கட்டமாக உதகையில் வண்ண மீன்கள் கண்காட்சி தொடங்கியது. சுமார் 500-க்கும் அதிகமான அரிய வகை மீன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பிரானா, ஜாய்ன்ட் கௌரமீ, ரெட் டிராகன் பிளாவரான், கிரேபிஷ் உள்ளிட்ட பல வகை மீன்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ள வரை மீன்களின் கண்காட்சி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.