நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் லேசான மழையும் இரவில் கன மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக 250க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல இடங்களில் சிறிய அளவிலான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. தற்போது மழையின் அளவு குறைந்து போதிலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது.
தொடர் மழையால் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அருகாமையில் உள்ள தங்கும் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் மழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய, மாநில பேரிடர் குழுவினர், கோவை, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உதகைக்கு வந்துள்ளனர்.
இவர்களிடம் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜே.சி.பி வாகனங்கள், கயிறுகள், படகுகள் என மீட்பு பணிக்கு தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
நீலகிரியில் அபாயகரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட 283 இடங்களில் இந்த குழுவினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகளை செய்து வருவதாக மாவட்ட இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதகையில் கன மழை: சாலையில் மரங்கள் சரிவு!