நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பாட்டவயலில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டனர். இதனால் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், நேற்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், காட்டு யானைகளிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலைமறியல் போரத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலர்கள் அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், காட்டு யானை தாக்குதலிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் திராவிடமணி, வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட வன அலுவலர் சோமன் சுரேஷ், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய் சிங் ஆகியோரோடு மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பட்டாவயல் பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க முதுமலை வனப்பகுதி எல்லையில் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள அகழியை நாளையே மறுசீரமைப்பது, பொதுமக்களைத் தாக்கும் காட்டு யானைகளைக் கண்டறிந்து அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவது, காட்டு யானைகள் தாக்கி படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிகாலை, இரவு நேரங்கள், பனிமூட்டம், மழை நேரங்களில் பொதுமக்கள் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டுமென வனத்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளபட்டது.