ஏப்ரல் 17ஆம் தேதி ஊட்டி அருகே கேத்தி பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 2 உயர் ரக ஜெர்சி பசுக்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி, சரக்கு வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
இது குறித்து மாடுகளின் உரிமையாளர் கேத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் துறையினர் பசுக்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியார் சோதனைச் சாவடியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி பதிவுக் காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் நெகிழித் தார்ப்பாயால் மூடிய ஒரு சரக்கு வாகனம் செல்வதும், அந்த வாகனத்தை சோதனைச் சாவடி அலுவலர்கள் விசாரிக்கும்போது, தார்ப்பாய் உள்ளே இருந்த பசு ஒன்று தலையை வெளியே நீட்டியிருந்ததும் பதிவாகியுள்ளது.
பின்னர் சிசிடிவி பதிவு காட்சிகளைக் கொண்டு சரக்கு வாகனத்தின் பதிவு எண்ணின் மூலம் தகவல்களைச் சேகரித்த காவல் துறையினர் உயர் ரக பசுக்களைத் திருடிய திருப்பூரைச் சேர்ந்த பார்த்திபன், சிவா ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரைத் தேடிவருகின்றனர்.
சிசிடிவி பதிவு காட்சிகளின் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த காவல் துறையினரை அனைத்து தரப்பு மக்கள் பாரட்டினர்.