கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி இன்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் இன்ஜின் மூலமாகவும் இயக்கப்படுகிறது.
நீலகிரியின் இயற்கை எழிலையும், வனவிலங்குகளையும், மலைமுகடுகளையும் மலைரயிலில் பயணிக்கும்போது கண்டு ரசிக்க முடியும். இதனால் அதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஊட்டி மலை ரயிலுக்காக தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில், 1949இல் தயாரிக்கப்பட்ட இன்ஜின் நிலக்கரிக்குப் பதில் பர்னஸ் ஆயில் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. அவற்றை, பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த இன்ஜின் இரு பெட்டிகளுக்கு நடுவில் இணைத்து மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டது. இன்ஜின் பராமரிப்பு பணி முடிந்த பிறகு, விரைவில் புதுப்பொலிவுடன் மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு - பிப்.22 தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!