கனமழையால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக உதகை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும், சாலை துண்டிப்பும் ஏற்பட்டு பொதுமக்கள் இன்னலுக்குள்ளாகினர்.
இதையடுத்து, உதகை அருகே உள்ள எமரால்டு, குருத்துக்குளி, அட்டுபாயில், காட்டு குப்பை ஆகியப் பகுதிகளில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் இடங்களையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழுத் துணைத் தலைவர் முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இயற்கைப் பேரிடர்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இதை மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறது.
நீலகிரி சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கணக்கெடுக்கப்பட்டு செய்து கொடுக்கப்படும். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட கூடலூர் பகுதிகளை நாளை ஆய்வு செய்யவுள்ளோம்" என்றார்.
இந்த ஆய்வின்போது அவருடன் கோட்டாட்சியர் சுரேஷ், அரசுத் துறை அலுவலர்கள் பலர் இருந்தனர்.