நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடியை சுற்றி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. அங்கு அப்பகுதியைச் சார்ந்த கால்நடைகள் தினம்தோறும் மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன.
இந்த நிலையில் மசினகுடி குரும்பர் பாடி பகுதியைச் சார்ந்த கௌரி என்ற ஆதிவாசி பெண், சிங்காரா வனப்பகுதியில் நேற்று (செப்டம்பர் 1) மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த புலி, கௌரியை அடித்து கொன்று அவரது உடலை அடர்ந்த வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, புலியை கண்காணிக்க அந்த பகுதியில் 10 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 2) காலை அந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது, புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. இதையடுத்து ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு புலியை தேட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, சம்பவம் நடைபெற்ற இடத்துடன் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நவீன ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டு புலியை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் கேமரா பறந்து சென்ற வனப் பகுதிகளில் புலி தென்படவில்லை.
இதனிடையே அந்த புலி, மனிதர்களை அடித்துக் கொல்லும் பழக்கம் உள்ளதா என்பதை கண்டறிய வனத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் மனிதர்களை கொல்லும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்சென்ட் திவ்யா உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சர்வதேச புலிகள் தினம்: வன விலங்குகளை காப்பதற்கான முயற்சிகள் எடுப்போம்!