நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஸ்ரீமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல், கோரவயல், அம்பலமூலா, மண்வயல் போன்ற பகுதிகளில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஆடு, ஐந்து மாடுகளை புலி கொன்றது. இதனால், அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லே அச்சமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே அந்த கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர், வனத்துறை அலுவலர்களை சந்தித்து, புலியை பிடிக்கக்கோரி மனு அளித்திருந்தனர். வனத்துறையினர் புலி நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படும் பகுதிகளில் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால் வனத்துறையினர் பழுதடைந்த கேமரா பொருத்தியதால், புலியின் உருவம் கேமராவில் பதிவாகவில்லை. இந்த நிலையில் வனத்துறையினரை கண்டித்து மக்கள் போராட்டம் அறிவித்ததை அடுத்து, இரவு முழுவதும் ரோந்து பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமங்களுக்குள் சென்று பல்வேறு இடங்களில் தீ மூட்டியும், தீ பந்தங்களை கொண்டு புலி நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படும் பகுதிகளில் இரவு முழுவதும் ரோந்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையின் இந்த நடவடிக்கை அந்த பகுதி மக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. இரவு முழுவதும் தீப்பந்தங்கள் உடன் கிராம மக்களை காப்பாற்றும் வகையில் உலாவரும் வனத்துறையால் அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் ஊருக்குள் நடமாடும் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படியுங்க: காவல் துறையினரை தாக்கிய நபர்கள் - சிசிடிவி காட்சி!