கோயம்பேடு சென்றுவந்த ஓட்டுநருக்கு கரோனா தொற்று இருந்த காரணத்தால் நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்குச் சீல்வைக்கப்பட்டன. இந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மருத்துவக் குழுவினர் வீடுதோறும் சென்று பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
இப்பகுதிகளை மண்டல சிறப்புப் பணிக்குழு கண்காணிப்பாளரான ஐ.ஏ.எஸ். அலுவலர் ஞானசேகரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டனர்.
மேலே குறிப்பிட்ட மூன்று பகுதிகள் போக ஏற்கனவே நான்கு பகுதிகள் சீல்வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவது கவனிக்கத்தக்கது.
ஆய்வைத் தொடர்ந்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அளித்த பேட்டியில், "நீலகிரியில் சீல்வைக்கப்பட்ட நான்கு இடங்களுக்கு இன்றுடன் (மே 9) காலக்கெடு முடிவடைவதால் நாளை (மே 10) அப்பகுதிகள் தளர்த்தப்படும். தற்போது சீல்வைக்கப்பட்ட மூன்று பகுதிகள் மட்டுமே தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே ரேஷன் உள்பட அனைத்து பொருள்களும் வழங்கப்பட்டுவருகின்றன. இதுவரை ஆயிரத்து 534 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஓட்டுநர்கள் 585 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று குணமடைந்து 9 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் நான்கு நபர்களே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்" என்று கூறினார்.