சுற்றுலா நகரமான நீலகிரியில் ஆண்டு முழுவதும் இரவு பகல் பாராமல் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் தங்களது பணியை தவறாது செய்துவருகின்றனர். அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நேற்றைய தினம் தூய்மைக்குச் சேவை என்னும் விழா நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் 1,500க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், ”இன்றைய தினம் உங்களுடைய தினம். பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகள் எப்படிச் செல்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அத்தகைய பணியைச் செய்யும் உங்களால் மட்டுமே அதைச் சரியான முறையில் மக்கும் மற்றும் மக்காத குப்பை எனத் தரம்பிரித்து எடுத்துச்சென்று சுகாதாரத்தைப் பாதுகாக்க முடிகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களுக்கு, சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் துப்புரவுப் பணியாளர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் நாடகம், பாடல், நடனம் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் அரசு அலுவலர்களுக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட ஆட்சியர் துப்புரவுப் பணியாளர்ளுடன் படுகர் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதையும் படிங்க: மருந்துக்கான மூலப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!