நீலகிரி மாவட்டம், கூடலூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட கொச்சு குன்னு தனியார் எஸ்டேட் வனப்பகுதியில், குட்டி யானை ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்பகுதியில் தாய் யானை அடங்கிய மூன்று யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதால், வனத்துறையினர் குட்டி யானை அருகில் நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இறந்த யானை அருகே நெருங்க முயற்சித்தாலும், வனத்துறையினரை அந்த யானைகள் கூட்டம் விரட்டி வருகின்றன.
சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் பெரியளவில் பாதிப்பு இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்று உயிரிழந்த குட்டி யானையை வனத்துறையினர் அங்கிருந்து எடுத்துச் செல்லும் போது, அதன் தாய் யானை கூட்டமாக வந்து, வனத்துறையினரின் வாகனத்தை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவசாய நிலங்களுக்கு தினமும் ஒற்றை யானை விசிட் - அச்சத்தில் ஊர் மக்கள்!