நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி முதல் கடுமையாக பெய்த மழையால் கூடலூர், பந்தலூர் தாலுக்காகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புறமண வயல், மங்குழி, தோட்டமூலா, இரண்டாவது மைல், கொக்கோ காடு, பொண்னானி, காளம்புழா போன்ற தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில், பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.12) முதல் மழை குறைந்ததை அடுத்து உறவினர்கள் வீட்டில் இருந்தவர்களும் முகாம்களில் இருந்தவர்களும் தங்களது வீடுகளை நோக்கி படையெடுத்தனர்.
அனைத்து வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பீரோ, கட்டில், மெத்தை, உடைகள், உணவுப் பொருள்கள், மின்சாதன பொருள்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. சில வீடுகளில் சுவர்களும் சேதமடைந்திருந்தன. ஒருசில வீடுகளில் கோழிகள், ஆடுகள் என வளர்க்கப்பட்ட அனைத்து கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வீடுகளில் தேங்கியுள்ள மண் குவியல், தண்ணீரை தாங்களாகவே சுத்தம் செய்துவரும் மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளதாகவும், தங்களை இதுவரை மாவட்ட நிர்வாகமும் அரசு அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் வெள்ளம் சூழ்ந்த இடத்தை ஆய்வுசெய்து இழப்பீடுகளை விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்டோர் 20 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்