தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காளான் உற்பத்திக்கு மண், உரங்களை பிளாஸ்டிக் பைகளின் மூலம்தான் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தோட்டக்கலை துறையினரும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து காளன் உற்பத்தியாளர்களுக்கு நான்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிளாஸ்டிக்கை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்டத்தில் காளான் உற்பத்தி மேற்கொள்ளும் 32 பேருக்கு மட்டும் அடையாள அட்டை, முறையான ஆவணங்கள் காணப்பிக்கப்பட்டு, அதற்கான கட்டணத்தையும் செலுத்தி பிளாஸ்டிக்கை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல், அனைத்தையும் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட சோதனைச்சாவடிகளில் அனுமதி ரசீது இருந்தால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது. இது காளான் உற்பத்தியாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.