நீலகிரி: நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கி.மீ கொண்ட இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும், அழகிய இயற்கை காட்சிகள் காண கிடைக்கின்றன.
மலை ரயில் பயணத்தின்போது, வனப்பகுதியில் பல வனவிலங்குகளும் தென்படுவது வழக்கம். இதனால் இவற்றைக் கண்டு ரசிக்கவும் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர். இருப்பினும், மழைக் காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து, தண்டவாளங்கள் சேதமடைவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக, நேற்று மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, இன்று (டிச.08) மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறுகையில் “மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் ரயில் பாதைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பிறகு சேவை துவங்கும்” என்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் காயத்துடன் திரிந்த குட்டி யானை தெங்குமரஹடாவில் விடுவிப்பு!