தமிழ்நாடு முழுவதிலும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நெகிழி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வபோது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே, குன்னூர் அடுத்த உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான உலிக்கல் சேலாஸ் பகுதிகளில் இருக்கும் கடைகள், வணிக வளாகங்களில் பேரூராட்சி செயலர் ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில் ”சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எதிர்வரும் காலங்களில் நெகிழி பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களின் உரிமையும் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை!