நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள மூங்கில் மரங்கள் நடவு செய்யப்பட்டது. குறிப்பாக மூங்கில் மரங்கள் 36 ஆண்டு முதல் 40 ஆண்டுவரை மட்டுமே வாழக்கூடியது. அழியும் தருவாயில் உள்ள மூங்கில் மரங்களில் பூ பூக்கத் தொடங்கும் பின்பு அரிசியாக மாறிய பின்னர் மரமே காய்ந்துவிடும்.
கூடலூரிலிருந்து தொரப்பள்ளி வரை பல ஆயிரம் ஏக்கரில் மூங்கில் தோட்டங்கள் உள்ளன. தற்போது அந்த மூங்கில் மரங்கள் முழுவதுமாக பூத்து அரிசியாக மாறி, அரிசியானது தரையில் உதிரத் தொடங்கியது. அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த அரிசியை சேகரிக்க அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுமார் 10-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் தினந்தோறும் அந்த அரிசியை சேகரித்து விற்பனை செய்துவருகின்றனர். பழங்குடியினரிடம் நேரடியாக வரும் வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு 600 ரூபாய்வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பழங்குடியினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள மூங்கில் மரங்கள் அனைத்தும் மிகவும் பழமையானது என்பதால் தற்போது பூக்கத் தொடங்கி உள்ள நிலையில் ஓரிரு ஆண்டில் அழியும் தருவாயில் உள்ளது. இதனால் யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருங்காலங்களில் யானைகள், மனிதர்களுக்கும் மோதல்கள் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக வனத்துறையினர் காய்ந்து வரும் மூங்கில் மரங்களுக்கு நடுவே புதிய மூங்கில் நாற்றுகளை நட்டு மூங்கில் தோட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு மிஸ்ஸாகும் ஃபுட்!