நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவினால் மலை கிராமங்களில் வசித்து வரும் இந்தப் பழங்குடியின மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக உதகை அருகேயுள்ள சிறீயூர், ஆனைகட்டி, சொக்கநள்ளி, கரிக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதேபோல், மாற்றுத்திறனாளிகள் காலனியில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளும் இதே பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தச்சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்க வழங்குவதற்காக மலை மாவட்ட விவசாயிகள் இலவசமாக பல டன் காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.
விவசாயிகள் வழங்கும் காய்கறிகளைப் பெற்று, அரசு அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பணியினை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். 144 தடை உத்தரவு நீக்கப்படும் வரை வாரத்திற்கு ஒரு முறை இதுபோன்று அத்தியாவசியப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்திற்கே வந்து வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: தற்காலிகமாக மாற்றப்படும் வில்லிவாக்கம் மார்க்கெட்