நீலகிரி: கூடலூர், மசினக்குடி பகுதிகளில் நான்கு மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற T23 புலியைப் பிடிக்க வனத் துறையினர் கடுமையாகப் போராடிவருகின்றனர். 19ஆவது நாளாகப் புலியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதில் சிக்கல்கள் நீடித்துவருகின்றன.
இந்தநிலையில் T23 புலி, நேற்று (அக். 12) முதுமலை போஸ்பரா வனப்பகுதியில் கண்டறியப்பட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டதில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது. மேலும் போதிய வெளிச்சமின்மை காரணமாகத் தேடுதல் வேட்டை முடிக்கப்பட்டது.
புலி நடமாட்டம் கேமராவில் பதிவு
இதனைத் தொடர்ந்து, இன்று (அக். 13) காலை 6 மணியளவில் புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல், கார்குடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்ததில், தற்போது போஸ்பரா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நம்பிகுன்னு வனப்பகுதியில் நடமாடிவருவது உறுதிசெய்யப்பட்டது. வனத் துறையினர், கால்நடை மருத்துவர்கள் புலி நடமாடும் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டதால் போஸ்பரா, நம்பிகுன்னு பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 51 பேர் வெற்றி