நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயம் பெருமளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மலை காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் விதைகள் வழங்கபட்டு வருவதால் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் புது முயற்சியாக முதல் முறையாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு கூடத்தில் ஸ்ட்ராபரி நாற்றுகள், திசு வாழை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
கிராண்ட் 9 என்னும் திசு வாழை நாற்றுகள் பயிரிடுவதன் மூலம் 1 ஏக்கருக்கு 40 டன் வரை கிடைப்பதுடன் 6 அடி வாழை தார் ஆகும் எனவும், காற்றுக்கு வாழை கன்றுகள் சேதம் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. தனியாரிடம் தரமற்ற ஸ்ட்ராபரி, வாழை நாற்றுகளை விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்கி வந்த நிலையில் தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையிலும் தரமான முறையிலும் தற்போது நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நாற்றுகள் மானிய விலையில் வழங்கபடவுள்ளதாகவும், வரும் நாட்களில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அதிகளவில் நாற்றுகள் உற்பத்தி செய்யபடவுள்ளதாகவும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். மானிய விலையில் நாற்றுகளை விவசாயிகள் பெற்று பயிர் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.