உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா ஆகியவை உள்ளன. இந்த நிலையில் இந்தப் பங்களாவிற்குள் கொள்ளையடிப்பதற்காக 2017 ஏப்ரல் 24 அன்று ஒரு கும்பல் நுழைந்தது. அப்போது, அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பரை அந்தக் கும்பல் கொலைசெய்தது.
தொடர்ந்து பங்களாவிற்குள் நுழைந்த அந்தக் கும்பல் பல்வேறு பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இவ்வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
வழக்கில் தொடர்புடைய 10 பேரும் பிணை பெற்றுள்ளனர். இந்நிலையில், வழக்கு விசாரணை நேற்று (ஆகஸ்ட் 13) உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் முன்னிலையாகினர். கரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் உள்ள மற்ற எட்டு பேர் முன்னிலையாகவில்லை. வழக்கை நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்தார். தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய வழக்கு விசாரணையின்போது,
- இவ்வழக்கு விசாரணையை மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் எனக் காவல் துறை தரப்பில் ஒரு மனுவும்,
- இதேபோல சாட்சிகளிடம் விசாரணை நடத்தக் கோரி முதலாவது குற்றவாளி சயான் தரப்பில் ஒரு கோரிக்கை மனுவும்,
- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளதற்கான மனுவும் வழங்கப்பட்டுள்ளன.
வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் காவல் துறை சார்பிலும், முதல் குற்றவாளி தரப்பிலும் - உள்பட மூன்று புதிய மனுக்கள் தாக்கல்செய்திருப்பதால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் சில முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும்தான் காரணம்'