நீலகிரி: மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மலை ரயில் சேவை, தற்போதும் இயங்கி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இதில் பயணம் செய்வதற்கு, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ சார்பில் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. வருகின்ற ஜூலை 15ஆம் தேதியோடு ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்ட 16ஆவது ஆண்டு தொடங்குகிறது.
அதே நேரத்தில், இந்த ரயில்கள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுவதால், இதில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், 84ஆம் எண் கொண்ட பழமையான இன்ஜின் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனினும் 8.8 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய நிலக்கரி நீராவி இன்ஜின் தயாராகி வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு, முதன்முறையாக இந்தப் புதிய நிலக்கரி நீராவி இன்ஜின் தயராகி வருகிறது.
விரைவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தச் செய்தி மலை ரயில் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பெண்களின் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி' - முதலமைச்சர் ஸ்டாலினின் ’மலாலா தின’ பதிவு