நீலகிரி: பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், குன்னூர் பர்லியார் ஊராட்சியில் உள்ள சின்ன குரும்பாடி பகுதியில் உள்ள குரும்பர் இன பழங்குடியின மக்களுக்காகப் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2.67 லட்சம் ரூபாய் மானியத்தில் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே பழைய குடியிருப்புகளிலிருந்த மக்களை காலி செய்ய வேண்டும் எனக் கூறியதால் பழைய வீடுகளிலிருந்த பொருள்களை எடுத்து வீதிகளில் வைத்து பழங்குடியினர் காலி செய்து கொடுத்தனர்.
மேலும் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தகரக் கொட்டகையிலேயே கடந்த 10 மாதங்களாக மழையிலும் வெயிலிலுமிருந்து கஷ்டப்படுவதாகவும் கட்டப்பட்டுவரும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மேல்தளப் பூச்சு வேலைகளை முடிக்காமல் பாதியிலேயே வேலையை நிறுத்திவிட்டதாகவும், பழைய வீடுகளில் உள்ள கட்டில் பீரோ உள்ளிட்ட மரப்பொருள்கள் மழையில் நனைந்து வீணாவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதனால் பழங்குடியின மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் இதுபோன்ற பழங்குடியினருக்கான திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதுடன், தரமான வீடுகளைக் கட்டித்தர வேண்டும் எனப் பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு எருகாட்டும் விழா நடத்திய சொரையூர் கிராமத்தினர்