நீலகிரி: குன்னூர் ஓட்டுப்பட்டறை அருகே, துர்நாற்றம் வீசி வந்த நகராட்சி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி 'கிளீன் குன்னுார்' என்ற தன்னார்வ அமைப்பு கழிவு மேலாண்மைப் பூங்கா அமைத்தது.
அங்கு சேரும் குப்பைகளை மட்கும், மட்கா குப்பைகள் எனத் தரம் பிரித்து, 'பேலிங்' இயந்திரம் மூலம் 'பிளாஸ்டிக் பேக்கேஜ்' செய்து, பர்னஸ் ஆயில் தயாரிக்க, அனுப்பப்படுகிறது.
இதில் சிறியளவிலான பிளாஸ்டிக்குகள் மட்கும் குப்பைகளுடன் கலந்து விடுவதால், முழுமையாகத் தரம் பிரிக்க முடியாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர்.
இதை அறிந்த அளக்கரை பகுதியைச் சேர்ந்த தனியார் தேயிலைத் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் சுனில், சுமன் குப்பைகளை எளிதாக தரம் பிரிக்க ஏதுவாக நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சல்லடை இயந்திரத்தை இலவசமாக வழங்கினர்.
சல்லடை இயந்திரத்தால் பலன்
இதனால் தற்போது துப்புரவுத் தொழிலாளர்கள் பிளாஸ்டிக், பேப்பர், மாஸ்க் கழிவு, மருத்துவக் கழிவு உள்ளிட்டவற்றை எளிதாகப் பிரித்து எடுக்கின்றனர். மேலும் அதிக எடை கொண்ட பொருட்களையும் இந்த இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கின்றனர்.
சிறிய அளவிலான இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எளிமையாக இருப்பதுடன் வரவேற்கத்தக்கது என்று துப்புரவுத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: யானைகள் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு