தமிழ்நாட்டில் நான்காயிரத்து 100 கோடி ரூபாய் (60 விழுக்காடு மத்திய அரசின் பங்கு) மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். அப்போது நீலகிரி மாவட்டம் உதகையில் 460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரியும் திறந்துவைக்கப்பட்டது.
காணொலி மூலமாக நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு காரணமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதால் அதனை ரத்துசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் கலந்துகொண்ட கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை, பாஜக அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது" என்றார்.
இதையடுத்து அதே விழாவில் கலந்துகொண்ட வனத் துறை அமைச்சர் ராமசந்திரன் கூறும்போது, "எழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர பிளஸ் 2 மதிப்பெண்களே போதும். நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை. எனவே நீட் தேர்வை ரத்துசெய்ய அரசு தொடர்ந்து போராடும்" என்றார்.
இதையும் படிங்க: ஈமு பண்ணை மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த நபர் கைது