ஊட்டி அருகே கூடலூரை அடுத்துள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மூச்சுக்குன்று வடக்கு கிராமம். இக்கிராமத்தில் பழங்குடியினர் உள்ளிட்ட இதர மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரும் இம்மக்கள் சாலை வசதி இன்றி மிகவும் தவித்து வருகின்றனர். இந்தபகுதி தற்போது வனத்துறை வசம் உள்ளது. இதனை அடர்ந்த வனப் பகுதியாக அங்கீகரித்து அவர்கள் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய தடை விதித்துள்ளனர்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலமுறை சாலையை செப்பனிட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மக்கள் நடந்து சென்ற ஒத்தையடி பாதையும் முற்றிலும் சேதமானது. அந்த சாலையும் சரி செய்ய வனத்துறையினர் தடை செய்துள்ளனர்.
இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவர் பாம்பு கடித்த நிலையில் அவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் உயிரிழந்தார்.
சரியான சாலை வசதி இல்லாதது அப்பகுதி மக்களுக்கு பெருத்த வேதனையை கொடுத்துள்ளது. அக்கிராம மக்களின் கோரிக்கை ஒன்றுதான். சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு சாலை வசதிகளை அரசு உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே.!
இதையும் படிங்க: சாலையின் குறுக்கே மண், ஜல்லி - நோயாளிகளை தூக்கிச் செல்லும் அவலம்!