நீலகிரி: பழமை வாய்ந்த ராணுவ பயிற்சி இடமான மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் வெலிங்டன் பகுதியில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அக்னி வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் கொடி அறக்கட்டளை உதவியுடன், குன்னூர் பகுதியில் உள்ள வெலிங்டன் கண்டோர்மென்ட் பகுதியில் புதிதாக 108 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், கொடி அறக்கட்டளை உதவியுடன் நடந்த இந்த விழாவில், ராணுவப் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ் நேற்று (டிச.13) கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது, “மெட்ராஸ் பயிற்சி மையத்தின் பாரம்பரியம் மற்றும் ஒழுக்கத்தைப் போற்றும் வகையில் அவாஹில் விளங்குகிறது. இது அக்னி வீரர்களின் முக்கிய பயிற்சிப் பகுதி ஆகும். தேசியக் கொடிக்கு என்று தனி மரியாதை உள்ளது. வெலிங்டன், அருவங்காடு மற்றும் குன்னூர் பள்ளத்தாக்கில் இருந்து காணும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த கொடிக் கம்பம், நமது தேசிய அடையாளத்தையும், உணர்வையும் உணர்த்தும் வகையில் திகழும்.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடிய மாணவ மாணவிகள், மற்றும் பல அரசு தரப்பு ஊழியர்கள் நாட்டுப்பற்றை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேலு, குன்னூர் கோட்டாட்சியர் பூஷ்ண குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார், ராணுவ உயர் அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமனோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்!