கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் முதுமலையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு கோலாகலமாக விழா நடைபெறும். இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு பணிபுரியும் வனத்துறையினர் அவர்களது உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
முன்னதாக, யானைகளை மாயாற்றில் குளிக்க வைத்து சந்தனம், குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு முகாமில் யானைகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டன. பின்னர் முகாமிலுள்ள விநாயகர் கோயிலில் மசினி, கிருஷ்ணா என்ற இரு யானைகள் கோவிலைச் சுற்றி மணியடித்தவாறு மூன்று முறை சுற்றிவந்தன.
பின்னர் கோயிலின் இருபக்கமும் நின்ற இரண்டு யானைகள் தோப்புக்கரணம் போட்டும் தும்பிக்கையை தூக்கி விநாயகரை வழிபட்டது. பின்னர் முகாமில் நிற்கவைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு சிறப்பு உணவான வெல்லம், ராகி , பொங்கல், கரும்பு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி போன்ற உயர் அலுவலர்கள், வன ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதுமலைப் புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட்ட யானைகள் தினம்