கேரளாவில் மட்டுமே பிரபலம் அடைந்து வந்த MUD FOOTBALL எனப்படும் சேற்றில் விளையாடும் கால்பந்து விளையாட்டு கூடலூரில் இளைஞர்கள் மத்தியில் தற்சமயம் பிரபலம் அடைந்துள்ளது. பண்படுத்தப்பட்டு, நெல் நாற்றுகள் நடுவதற்கு தயாராக இருக்கும் நிலையில் உள்ள வயல் பகுதியில் மைதானம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.
மற்ற கால்பந்து விளையாட்டை போன்று இல்லாமல், இந்த வகையான கால்பந்து போட்டி கடினமாக இருக்கும், அதே நேரத்தில் ஆபத்து நிறைந்தது என தெரிவிக்கின்றனர். இந்த விளையாட்டில் விதிமுறைகளை பொறுத்தவரை சாதாரண கால்பந்து விளையாட்டில் உள்ளது போல இல்லாமல், இந்த வகையான கால்பந்து போட்டியில் விதிமுறைகள் சற்று மாறுபட்டு உள்ளது. கேரளாவில் மட்டுமே பிரபலம் அடைந்துள்ள இந்த விளையாட்டை கூடலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியது, தமிழக - கேரளா எல்லையில் இயங்கி வரும் தனியார் கல்லூரிதான்.
கடந்த ஆண்டு முதன்முறையாக நடத்தபட்டாலும், இந்த ஆண்டுதான் இந்த போட்டி உள்ளூர் மக்களிடையே பிரபலம் அடைந்தது. மேலும், இதனை கூடலூரில் நடத்த பலரும் ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில் இந்த முறை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இதில், முதல்முறையாக பெண்களும் பயன்பெறும் வகையில் மாணவிகளுக்கு சேற்றில் விளையாடும் எறிபந்து போட்டி நடத்தப்பட்டது. ஆர்வத்துடன் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தமுறை நடத்தப்பட்ட போட்டியில் கூடலூரைச் சேர்ந்த 4 அணிகளும், அருகில் உள்ள கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 4 அணிகளும் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடந்த போட்டிகளில் கூடலூர், தாளூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கண்களில் சகதி பட்டு சிரமத்தை சந்தித்தாலும் சுவாரசியமாக மக்களைக் கவர்ந்த இறுதிப் போட்டியில் தாளூர் பிரதர்ஸ் அணியினர் 1 - 0 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.