நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தக்ஷின் ஏரியா கிராஸ் கன்ட்ரி 2021 கோப்பைக்கான ஓட்டப்பந்தயம் எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியை எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டென்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தக்ஷின் பாரத் ஏரியாவின் 12 அணிகள் கலந்து கொண்டன. ஓட்ட பந்தயத்திற்கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இப்போட்டியில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணி முதலிடம் பிடித்தது. ஹைதராபாத் ஆர்டில்லரி படைப் பிரிவு இரண்டாமிடம் பெற்றது.
தனி நபர் வரிசையில் 10 கிலோ மீட்டர் தூரத்தை எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணியின் வீரர் அவில்தார் பரசப்பாஹலிஜோ 31 நிமிடங்கள் 36 நொடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். ஹைதராபாத் ஆர் டில்லரி அணியின் வீரர் நாயக் இமாவறித் ரத்தோர் 32 நிமிடங்கள் 50 நொடிகளில் கடந்து இரண்டாமிடம் பெற்றார்.
இதற்கான பரிசளிப்பு விழாவில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு