உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் குளு, குளு காலநிலை நிலவுவதால் இதமான காலநிலையில், உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை அடுத்து அரசு ரோஜா பூங்காவைக் காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் ரோஜா பூங்காவில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள 40 ஆயிரம் ரோஜா செடிகளில் 4 ஆயிரம் ரகங்களில் பூத்து குலுங்கத் தொடங்கியுள்ள பல வகை ரோஜா மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக ரோஜா செடிகளில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, பச்சை, வெள்ளை என பல்வேறு நிறங்களில் சிறியது முதல் பெரியது வரை பூத்துள்ள ரோஜாக்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. பூங்காவிற்கு வருகை தந்த அனைவருக்கும் ரோஜா பூக்கள் சிறப்பான விருந்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.