குன்னூர் பகுதியைச் சேர்ந்த மோலி எலியட் எனும் நபர் நீலகிரி மாவட்டக் காவல் துறையினருக்கும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் துறைக்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிபுரிந்து வருகிறார். இவரின் இந்த சேவையைப் பாராட்டி, இவருக்கு கெளரவ போக்குவரத்து வார்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
73 வயதான மோலி எலியட், வீடு, குடும்பம் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், அவருக்கு குன்னூரில் உள்ள தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர். குன்னூர் நகரத்தில் மிக எளிதாக அடையாளம் இவரை அடையாளம் காணலாம். 1970களில் தொடங்கி இவர் காவல் துறைக்கு உதவத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து மோலி எலியட்டிடம் கேட்டபோது, “சாலைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், குன்னூர் பகுதிக்கு வருகை தரும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் நான் காவல் துறைக்கு உதவத் தொடங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை என்றாலும், வருமானம் ஈட்ட வேறு எந்த வேலையும் இல்லை என்றாலும், எலியட் நாள் தவறாமல் கடமையாற்றுகிறார். இவ்வாறு பணி செய்வதை அவர் பெருமையாக எண்ணுகிறார். இந்நிலையில், இந்த கரோனா காலத்திலும் தனது 73ஆவது வயதில் எவ்வித அச்சமும் இன்றி முகக் கவசம் அணிந்து போக்குவரத்து காவல் துறையினருக்கு மோலி எலியட் உதவி வருகிறார்.