நீலகிரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், பெரு நிறுவன முதலாளிகளுக்காக இந்த வேளாண் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வேளையில் நீலகிரி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது.
அதில் அக்கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரியும் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், முற்றுகையிட வந்த 100க்கும் மேற்பட்டோரை வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.