சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் கத்திக்காரனூரைச் சேர்ந்த குமார் என்கிற நரேஷ்குமார் (21). அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (60) என்பவரை கொலை செய்த வழக்கில் அவரை புளியங்குடி காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நரேஷ்குமாரை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைக்கும் முன் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதே சமயம், நரேஷ்குமாரிடம் விசாரணை நடத்திய மல்லூர் காவல் ஆய்வாளர் குலசேகரன், செங்கோட்டையில் மடக்கி பிடித்த புளியங்குடி காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி நரேஷ்குமார், கடந்த 21ஆம் தேதி திடீரென காணாமல்போனார். இதுகுறித்து மல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனை முழுவதும் குமாரை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் வசித்து வந்த காமலாபுரம் பகுதியிலும் காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குன்னூர் பர்லியார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது பிபிடி உடையுடன், இருசக்கர வாகனத்தில் வந்த நரேஷ்குமாரை வெலிங்டன் காவல் நிலைய எஸ்.ஐ. ராமன், காவலர் ஹனீஷ் ஆகியோர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த சேலம் தனிப்படை குழு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுவதில் பாதிப்பில்லை - வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் இனியன் தகவல்