நீலகிரி: இண்ட்கோசர்வ் நிறுவனத்தை லாபத்தில் இயக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனொரு பகுதியாக இண்ட்கோசர்வ் தொழிற்சாலைக்கு தேயிலையை வழங்கும் சிறு, குறு விவசாயிகள், தொழிற்சாலை நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கா.ராமசந்திரன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தா.மோ. அன்பரசன், ”இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 16 தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களை புனரமைக்க ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வழங்கி வரும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்காக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கிலோவிற்கு ரூ.10 நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆகவே தேயிலையின் தரத்தை உயர்த்த முயற்சி எடுக்க உள்ளோம். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். தரமான தேயிலையை விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். பச்சை தேயிலைக்கு ஆதார விலை, மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சென்னை போர் நினைவுச்சின்னத்தில் இளைஞர்கள் போராட்டம்...