கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளைத் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம், மலை மாவட்டம் என்பதாலும், அதிகாலை நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் பொதுமக்களின் நலன் கருதி கடைகளை காலை 8 மணி முதல் 12 மணி வரை கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கபட்டு வருகிறது.
அந்த வகையில், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் உதகை சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.கணேஷ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (மே.20) உதகை நகராட்சியில் பணியாற்றும் 350 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு அளித்து முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விரைவில் கடை திறப்பு நேரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, கூடலூர் சட்டப்பேரவைத் உறுப்பினர் பொன்ஜெய்சீலன், குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சாந்திராமு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து நீலகிரி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது குன்னூர் முன்னாள் சட்டப்பேரவைத் உறுப்பினர் சாந்திராமு கரோனா தடுப்பு நடவடிக்கையின் தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்,
இதையும் படிங்க: கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!