நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இல்லாததால் தனியார் பள்ளிகளில் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு, நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகள், ஊசி உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் பயன்படுத்திய பின்னர் வெட்ட வெளியில் வீசப்பட்டுள்ளன.
குரங்குகள் அவற்றை இழுத்து உணவுப் பொருள்கள் ஏதேனும் கிடைக்குமா என ஆராய்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பயன்படுத்திய மருந்து மற்றும் பாதுகாப்பு பொருள்களை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய (ஜூலை 21) தினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். ஆனால், அரசு செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்யவில்லை என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க:'மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை; எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்'