நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தஞ்சாவூரிலிருந்து உதகைக்கு விளக்குகள் ஏற்றி வந்த லாரியை ஆனந்த் என்பவர் ஓட்டி வந்துள்ளார். குன்னூர் காட்டேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மாற்றுத் திறனாளி ஒருவர் திடீரென்று ஓடும் லாரியின் பின்புற சக்கரங்களில் விழுந்துள்ளார். இதில், தலை நசுங்கி அதே இடத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.