நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு பல இடங்கள் கட்டடங்களாக மாறுகின்றன.
குறிப்பாக, வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த வசதி படைத்தவர்கள் மூன்று அல்லது நான்கு அடுக்கு மாடி கட்டடங்களை விதிகளை மீறி கட்டி வருகின்றனர்.
இந்த கட்டடங்கள மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தாலும், பல இடங்களில் அரசு அலுவலர்கள் துணையுடன் கட்டடங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், "மசினகுடி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட மதுக்கடை பார், கல்லட்டி பகுதியில் விதி மீறி அமைக்கப்பட்ட ரிசார்ட் , கேத்தி பேரூராட்சி பொரையரட்டி பகுதியில் கட்டுமான பணி , குன்னூர் டால்பின்நோஸ் பகுதியில் 1800 சதுர அடிக்கு அனுமதி பெற்றுவிட்டு 8000 சதுர அடியில் விதிமீறி கட்டிய கட்டிடம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களில் இந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து இடிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.