தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்துவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக, மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன. நேற்று இரவு மஞ்சூர் சாலையில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதையடுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலைகளை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டால் உடனே அப்புறப்படுத்த தயார் நிலையில் ஜேசிபி இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை