நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால், பல இடங்களில் அவ்வப்போது ஏற்படும் மண் சரிவாலும், மரங்கள் விழுவதாலும் நீலகிரி செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே, நேற்று நள்ளிரவு மலை உச்சியிலிருந்து விழுந்த பாறைகளால் போக்குவரத்து பெரிதளவு பாதிக்கப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து, நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, சரிந்து விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்படாத நிலையில், கடப்பாரையால் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும், நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்க பணியின் போது சரிவர பணியை முடிக்காமல் சென்றது தான், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்படுவதற்கும், சில சமயங்களில் பாறைகள் உயரமான இடங்களிலிருந்து விழுவதற்கும் காரணம் எனப் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், கனமழை பெய்யும் சமயத்தில் நீலகிரி மலைப்பாதையில் வாகனத்தை ஓட்டும் போது மிகுந்த கவனத்துடனும், மிதமாக வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும் என வாகன ஓட்டிகளை காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையில் பாறை விழுந்துள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 7000 கன அடி தண்ணீர் செல்கிறது.. கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!