நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் மீது கோத்தகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் கனகராஜ் முன்னமே விபத்தில் இறந்ததால் மீதமுள்ள 10 பேர் நேரில் ஆஜராகினர்.
ஏற்கனவே இந்த 11 பேர் மீது கொடநாடு பங்களாவில் ரூ. 200 கோடி பணம் இருப்பதாகக் கருதி கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியது, கொள்ளையடிக்கச் சென்றபோது பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டது ஆகியவற்றை முக்கிய குற்றச்சாட்டாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
மேலும், பங்களாவில் இருந்த 10 கை கடிகாரங்கள் மற்றும் 42 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிரிஸ்டல் பொம்மைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றது என 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் பரப்புரை: இபிஎஸ்-ஓபிஎஸ் பயண விவரம் வெளியீடு