உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு இன்று (நவம்பர் 2) வந்தது. இந்த விசாரணையின்போது சயான், வாளையாறு மனோஜ், திபு, உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி உள்பட10 நேரில் ஆஜராகினர்.
அப்போது சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள தங்களை சிறைத் துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் தெரிவித்து மனு அளித்தனர்.
அக்டோபர் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாவட்ட நீதிபதி வடமலையிடம் இது குறித்து கூறியதால் மத்திய சிறைத் துறை அலுவலர்களை நீதிபதி எச்சரித்தார். இதற்கு பழிவாங்கும் நோக்குடன் சிறைத் துறையினர் எந்த ஒரு வசதியும் இல்லாத மோசமான அறைக்குத் தங்களை மாற்றி உணவு, உடை வழங்காமல் துன்புறுத்துக்கின்றனர் எனப் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்டமகளிர் நீதிமன்ற நீதிபதி, சயான் குற்றச்சாட்டுகள் குறித்து கோவை மத்திய சிறைத் துறை அலுவலர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எச்சரிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த மின்னஞ்சலை தனக்கு அனுப்புமாறும் கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதி ஒத்திவைத்தார்.