நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவிற்கு சொந்தமான பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றன.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்ததால், அந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே கொடநாடு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சயான் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை மாவட்ட நீதிபதி வடமலை கடந்த 27ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் உள்பட 10 பேர் நேரில் ஆஜராகினர். அதில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டல், காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கு, பங்களாவில் இருந்த கைக் கடிகாரங்கள், 42 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் காண்டாமிருக பொம்மை உள்ளிட்டவற்ற கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு என மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நீதிமன்றத்தில் காவல்துறையினர் பதிவு செய்தனர். இதனையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.