நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெயின் நவ்யுக் சங்கம் சார்பில், 1979ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குன்னுரை பசுமையாக மாற்ற 'விருக்ஷா - 10கே' என்ற தலைப்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
முதற்கட்டமாக, குன்னுார் பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு நிலைய மேற்பகுதியில் 620 மரங்கள் நடவு செய்யப்பட்டன. இது மட்டுமின்றி குன்னூரில் பல்வேறு இடங்களிலும் 2000 மரங்கள் வரை நடவு செய்யப்பட்டன. இவை ஆன்லைனில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகின்றன. இதில், 95 விழுக்காடு மரங்கள் வளர்ந்து நல்ல நிலையில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சங்க நிர்வாகிகள், கிளீன் குன்னூர் அமைப்பினர், ஐ.டி. ஊழியர்கள், இன்ஜினியர்கள் என 60க்கும் பேற்பட்டோர் ஒருங்கிணைந்து இந்த பகுதிகளில் இன்று (நவம்பர் 21) தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, மரங்கள் வளர்க்கப்பட்ட இடங்களில் கிடந்த பிளாஸ்டிக், பழைய துணிகள், குப்பைகளை அகற்றினர். 200 கிலோ அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, ஓட்டுப் பட்டறை குப்பைக் குழிக்கு கொண்டுச் செல்லப்பட்டன.