நீலகிரி: கிரேட் ஹார்ன்பில்(Great Hornbill) எனும் இருவாச்சி பறவையைக் காண நீலகிரி மலைப்பகுதிகளில் கல்லாறு, காட்டேரி உள்ளிட்டப் பல இடங்களுக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் ஏராளமான பறவை ஆர்வலர்கள் வந்துசெல்கின்றனர். இதனிடையே, குன்னூர் மலைப்பகுதியில் தற்போது இருவாச்சி பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
இருவாச்சி பறவைகள் வனப்பகுதிகளுக்குள் வருவது அந்த வனம் வளத்துடன் இருப்பதைக்குறிக்கும். பெரிய இருவாச்சி பறவைகள் 130 செ.மீ. அகலமும், 152 செ.மீ. நீளமும் கொண்ட இறக்கைகளைக் கொண்டு இருக்கும். இதன் எடை 2 முதல் 4 கிலோ வரை இருக்கும்.
உயரமான மரங்களில் கூடு கட்டி வசிக்கிறது. இனப்பெருக்க காலத்தில், பெண் பறவை கூண்டுக்குள் சென்று அமர்ந்திருக்கும். ஆற்றுப்படுகையில் சேகரிக்கும் ஈரமான மண்ணைக்கொண்டு கூண்டை, ஆண் பறவை மூடி விடுகிறது. அவ்வாறு கட்டிய கூட்டில், தனது இறக்கைகள் முழுவதையும் உதிர்த்து மெத்தை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும். இதனிடையே 7 வாரங்கள் வரையில் பெண் பறவைக்கு ஆண் பறவையானது பழக்கொட்டைகள், பூச்சிகளைக் கொண்டு வந்து ஊட்டும்.
இரைக்காக வெளியே செல்லும் ஆண் பறவைகள் கூட்டிற்குத் திரும்பவில்லை எனில், அவைகளுக்காக காத்திருக்கும் பெண் பறவைகள், ஒருபோதும் தனது கூட்டைவிட்டு வெளியே வருவது இல்லையாம். இறுதிவரையில் கூட்டிற்குள்ளேயே இருந்து தனது உயிரை விடும் தன்மையைக்கொண்டது என்கின்றனர், பறவை ஆய்வாளர்கள்.
இதையும் படிங்க: சேலத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ பறவை!